`அரசு அலுவலர்கள் போராட்டம் நடத்துவார்கள்; நாங்கள் காரியத்தை முடிப்போம்!'- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

Img 20240209 234924.jpg

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் முடிவுற்ற அரசுத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பணிகள் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். அதன்படி, ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்த அவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.5.3 கோடி மதிப்பில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா

தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரூ.13 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கும் பணிக்கான ஆய்வு பணிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ராஜபாளையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் மூலமாக ராஜபாளையத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத ஊராக மாற்றியிருக்கிறோம். இதன் மூலம் ராஜபாளையத்தின் மற்றுமொரு பகுதி விரிவடையும். தற்போது நடைபெற்றுவரும் பாதாளச் சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், ரயில்வே சுரங்கப்பாதை பணிகளும்கூட தேர்தலுக்கு முன்பாக நிறைவடையும்” எனப் பேசினார்.

விழா

தொடர்ந்து, ‘வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் போராட்டம் நடத்துவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அலுவலர்கள் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கட்டும், நாங்கள் காரியத்தை முடித்து கொண்டேதான் இருப்போம். குறைகள், எல்லா மனிதருக்கும் உண்டு. நான்கு குறைகளை சொல்லி கோரிக்கையை முன்வைக்கும்போது, அதில் இரண்டை நிறைவேற்றிக் கொடுக்கிறோம். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள்முதல் அரசு அலுவலர்களின் குறைகளைக்கேட்டு அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். வருவாய்த்துறையில், இதுவரை இல்லாத அளவிற்கு தாசில்தார்கள் பணி நியமனம் செய்துள்ளோம். இதற்கு முன்பிருந்த அரசாங்கத்தைவிட, தற்போதைய அரசாங்கம் நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறது. ஆண்டாள் கோயிலில் சுகாதார வளாகம், பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், கோயில் கொடிமரங்கள், யானை சிலைகள் மாயமானது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *