முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களை ஈர்ப்பதால், பாஜக-வுக்குப் பலன் இருக்கிறதா?!

Capture.jpg

அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 15 பேரை பா.ஜ.க-வில் இணைத்திருக்கிறார், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

பிப்ரவரி 7-ம் தேதி டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைத்து கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், 1974 முதல் 2001 வரை அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் எம்.எல்.ஏ-க்களாக இருந்தவர்கள், பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். ஆக்டிவ் அரசியலில் இருப்பவர்கள் எவருமே அந்தக் குழுவில் இல்லை என்பதும், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளாலேயே அவர்களை `சட்டென’ அடையாளம் காண முடிவதில்லை என்பதுமே ஹைலைட்!

அண்ணாமலை

50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ-வாக இருந்தவர்களை பா.ஜ.க-வில் இணைப்பதால், என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறதென்ற கேள்வியும்… அரசியலில் ஆக்ட்டிவாக இல்லாதவர்களை டெல்லி வரை அழைத்துச் சென்று கட்சியில் சேர்ப்பதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

பாஜக-வில் இணைந்த 15 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், “எடப்பாடியின் பேச்சு, செயல் மற்றும் கூட்டணியை முறித்தது உள்ளிட்டவை அனைத்தும் அண்ணாமலையை கொதிப்படையச் செய்திருக்கிறது. எடப்பாடிக்கு `ஷாக்’ கொடுக்கும் நோக்கில், அ.தி.மு.க-விலிருக்கும் முக்கியஸ்தர்களுக்கு `ஸ்கெட்ச்’ போட்டிருக்கிறார் அண்ணாமலை என்ற செய்தி வலம்வந்தது.

அண்ணாமலை

அந்தச் சூழலில் 15 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், பா.ஜ.க-வில் இணையப் போகிறார்கள் என்ற தகவல் வந்ததும், அரசியல் களமே சூடுபிடித்தது. மேலும் பல மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்த கட்சி என்பதால், இது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் நிகழ்ந்தது என்னவோ தலைகீழாகத்தான். பா.ஜ.க-வினரெ ஆதிர்ச்சியடையும் விதமாக 1974-ம் ஆண்டிலும் 90-களிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, அரசியலை விட்டே விலகியவர்களைத்தான் கட்சியில் சேர்த்திருக்கிறார் அண்ணாமலை. அதிலுள்ளவர்கள் 65 முதல் 90 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களை கட்சியில் இணைப்பதால் என்ன தாக்கம் ஏற்படுமென முணுமுணுத்திருக்கிறார்கள் தமிழ்நாடு பா.ஜ.க-வினர் சிலர்” என்றனர்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி நிர்மல் குமார் “அந்த லிஸ்ட்டில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எனக் குறிப்பிடபட்டிருப்பவர்கள் எவருமே கட்சியில் தற்போதில்லை. அரசியலைவிட்டே விலகி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குமேல் இருக்கும். இதனால் அ.தி.மு.க-வுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது.

நிர்மல் குமார்

இவர்களை சேர்த்துக் கொண்ட பா.ஜ.க-வுக்கு ஒரு பயனும் இருக்காது. கட்சியில் சேர்ந்தவர்கள் ஒருநாள் டெல்லியையும் அருகில் இருக்கும் ஆக்ராவையும் சுற்றிப் பார்க்கலாம். அதைத்தாண்டி அதில் எந்த லாபமுமில்லை” என்றார் கிண்டலாக.

தி.மு.க செய்தித் தொடர்பாளர் சல்மா பேசுகையில், “அண்ணாமலை பா.ஜ.க-வில் 15 முன்னாள் எம்.எல்.ஏ-க்களை சேர்க்கப் போகிறார் என்ற செய்தி வந்தபோதே, அது நிச்சயம் காமெடி ஷோவாகத்தான் இருக்குமென கருதினோம். அது அப்படியே நிகழ்ந்திருக்கிறது. பா.ஜ.க-வில் இணைந்தவர்கள் ஒருவர்கூட அறிந்த முகங்களாக இல்லை, முதலில் அவர்கள் அரசியலிலேயே இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ-க்களை இணைத்திருக்கிறேன் என டெல்லி தலைமையை ஏமாற்றிவிடாலாம் என்ற நோக்கில், இது போன்ற நாடகங்களையெல்லாம் அரங்கேற்றுகிறார் அண்ணாமலை.

சல்மா

மிக விரைவில் அண்ணாமலை அம்பலப்பட்டுப் போவார். இவரின் செயல்பாடுகளையெல்லாம் பார்த்து தமிழ்நாடு பா.ஜ.க சீனியர்களே மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள். நடைப்பயணம் என்ற பெயரில் வீதிவீதியாகச் சென்று கட்சியை வீதிக்கு கொண்டு வந்ததுதான் மிச்சம்” என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *