சேலம்: தொடர் புகார்கள்; பரிந்துரைத்த முதன்மைச் செயலர்- சஸ்பெண்ட் ஆகிறாரா பெரியார் பல்கலை., பதிவாளர்? | Principal Secretary, Higher Education recommended for suspending the Registrar of Periyar University

Whatsapp Image 2024 02 09 At 14 21 50.jpeg

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் மற்றும் பதிவாளராக தங்கவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக, தமிழ்நாடு அரசுக்குத் தொடர் புகார்கள் வந்தது. அதையடுத்து, உயர் கல்வித்துறையின் அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி தலைமையில் இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்து, புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த விசாரணைக் குழு, பெரியார் பல்கலைக்கழகத்தில் பத்து கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டு, கடந்த 3 ஆண்டுகள் குறித்த ஆவணங்களைச் சரிபார்த்தது மட்டுமல்லாமல், பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழிலாளர்கள், தனியார் அமைப்பினர் என அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை கடந்த 5-ம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பொறுப்பு வகிக்கும் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகக் கணிதத் துறையில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக இருந்த தங்கவேல், பெரியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்துறையில் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

மேலும் கணினி அறிவியல்துறைக்குத் தேவையான உபகரணங்களை ஒரே நிறுவனத்தில்… அதுவும், அவரின் உறவினர் நிறுவனத்திலேயே வாங்கியது, இதற்காக இரண்டு முறை கூடுதலாக முன்தொகையைப் பெற்றது, பெரியார் பல்கலைக்கழக வளாக பராமரிப்பு என்ற பெயரிலும், கணினி தொடர்பான ஹார்டுவேர், சாப்ட்வேர் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

கணினி அறிவியல் மையத்திற்கு உயர்தர கட்டமைப்பு கொண்ட பொருள்கள் வாங்குவதாகக் கூறி, தரம் குறைவான பொருள்களை வாங்கியது உள்ளிட்ட தங்கவேல் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பழனிசாமி விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் தீன் தயாள் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு, பெரியார் பல்கலைக்கழகத்தில் போதிய மனித வளம் இருந்தபோதும் பணிகளை அவுட் சோர்சிங் என்ற பெயரில் தனியார் அமைப்புகளுக்குக் கொடுத்ததன் மூலம் நடைபெற்ற முறைகேடு என பல்வேறு முறைகேடுகள் மற்றும் கையாடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *