வெற்றி துரைசாமி: சட்லஜ் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட உடைகள், சூட்கேஸ்… மீட்புப் பணிகள் நிலவரம் என்ன?!

Whatsapp Image 2024 02 08 At 18 09 45.jpeg

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட தயாரிப்பாளராக இருக்கும் இவர், இமாச்சல் பிரதேசத்துக்குச் சென்றிருந்தார். உடன் அவரின் உதவியாளர் கோபிநாத்தும் போனார். பிறகு கின்னவுர் மாவட்டத்தில் பாங்கி நல்லா பகுதியில் காரில் லொக்கேஷன் பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறார்கள். அப்போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சட்லஜ் ஆற்றில் விழுந்தது. உடனடியாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புத்துறையின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த ஓட்டுநர் டென்சின் உடல் மீட்கப்பட்டது. சிறிது தூரத்தில் காயத்துடன் கிடந்த கோபிநாத் மீட்கப்பட்டு, சிம்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெற்றி துரைசாமி

ஆனால் வெற்றி துரைசாமி மட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் சைதை துரைசாமி, தனது மகனை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மீட்புக் குழுக்கள் மூலம் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் ஆற்றங்கரையில் மனித மூளை ஒன்றை போலீஸார் மீட்டனர்.

சைதை துரைசாமி

பிறகு அதை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது காணாமல்போன நபருடையதாக (வெற்றி துரைசாமி) இருக்கலாம் என போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று வெற்றி துரைசாமியின் உடைகள் கிடைத்தன. அவருடைய சூட்கேஸ், உடமைகளும் கிடைத்துள்ளன. இந்தச் சம்பவம், சைதை துரைசாமி குடும்பத்தினரையும் அவர் ஆதரவாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *