"நான் பாஜக-வில் இணைந்ததாக வாட்ஸ்ஆப் பார்த்துதான் எனக்கே தெரியவந்திச்சு!" – கதறும் முன்னாள் எம்.எல்.ஏ

Ann.jpg

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் டெல்லிக்கு சென்று பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுதொடர்பாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் சார்பில் பகிரப்பட்ட செய்தியில், “தலைவர் அண்ணாமலை தட்டித் தூக்கிய முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவரம்” என்ற தலைப்பில் கட்சியில் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதில், குறிப்பாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கருப்புசாமியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

கருப்புசாமி

இந்த செய்தி வெளியான அடுத்த சில மணி நேரத்தில் ஏ.ஏ.கருப்புசாமி தனது முகநூல் பக்கத்தில், `நான் என்னென்றும் அ.தி.மு.க-காரன்’ என்று குறிப்பிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். என்னதான் நடந்தது என்று கருப்புசாமியிடம் விசாரித்தோம். நமது போன் அழைப்பு எடுத்தவுடன் புலம்பாத குறையாகப் பேசத் தொடங்கினார் கருப்புசாமி, “காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் அண்மையில்தான் பா.ஜ.க-வில் இணைந்தார். அவர் எனக்கு நல்ல பழக்கம் என்பதால், அவர் மூலமாக என்னையும் பா.ஜ.க-வில் சேர அழைப்பு விடுத்தனர். ஆனால், நான் பா.ஜ.க.வில் சேர விருப்பமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன்.

அண்ணாமலை

ஆனால், நான் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக வாட்ஸ்ஆப்பில் வந்த செய்தியைப் பார்த்துதான் எனக்கே இது தெரியவந்தது. நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அ.தி.மு.க-வும்தான் காரணம். என்னை உயர்த்திவிட்ட கட்சிக்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். இதுதொடர்பாக கட்சித் தலைமைக்கு விளக்கமும் அளித்துவிட்டேன்.

அவங்களாகவே வந்து பேசுனாங்க. சும்மா பேசுனதற்கு எல்லாம் கட்சியில் இணைந்துவிட்டதாக தவறான செய்தியை பா.ஜ.க.-வினர் பரப்பி வருகின்றனர். பா.ஜ.க-வில் சேர்ந்ததாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ஒரு தரப்பினர் என்னை அழைத்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஒரு தரப்பினர் இது உனக்கு தேவையானு சங்கடப்படுகின்றனர். கட்சியில் இணையாமலேயே இணைந்துவிட்டதாக பா.ஜ.க.வினர் வேண்டுமென்றே செய்கின்றனர். இதை யாரிடம் போய் சொல்வது?” என்று புலம்பித் தள்ளினார் கருப்புசாமி.

கருப்புசாமி

இதுதொடர்பாக பா.ஜ.க.தரப்பில் விசாரிக்கையில், “கட்சியில் இணைவது தொடர்பாக கருப்புசாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதெல்லாம் உண்மைதான். அப்போது, எத்தனை பேர் சேருகிறார்கள் என்று ஒரு உத்தேச லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. அந்த லிஸ்டை வைத்து கருப்புசாமியும் கட்சியில் சேர்ந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *