DAY 43@எண்ணூர்: `மாசு கட்டுப்பாடு வாரியம்தான் A2’ – கொந்தளிக்கும் மக்கள்

13a99047 2d63 4456 A097 5c12082ec89f.jpeg

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் இரவு 11:30 மணிக்கு கோரமண்டல் உரத்தொழிற்சாலையிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டு, எண்ணூர் சுற்றியுள்ள பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட 8 கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுக்கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனடியாக மக்கள் தங்கள் பகுதிகளைவிட்டு இரவோடு இரவாக வேறு பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

நல்வாய்ப்பாக, அமோனியா கசிவு 10-15 நிமிடங்களுக்குள்ளேயே கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டதால், பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. விசாரணையில் அமோனியா கொண்டு செல்லப்படும் பைப்பில் ஏற்பட்ட கசிவே சம்பவத்துக்குக் காரணமென தெரியவந்தது. ஏற்கெனவே எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு, இது அடுத்த பேரிடியாகிவிட்டது.

இந்தச் சம்பவத்தால் கொதித்தெழுந்த மக்கள், `எண்ணூர் மக்களின் உயிர் அவ்வளவு மலிவாகிவிட்டதா?’ என டிசம்பர் 27-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக,  தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் விசாரணை நடத்திய நிலையில், கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. இதனிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது.

இதையடுத்தே, அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐஐடி பேராசரியர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு கோரமண்டல் தொழிற்சாலையை ஆய்வு செய்து, தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சூழலியல் பாதிப்பு இழப்பீடாக ரூ. 5.92 கோடி அபராதமும், ஆலை மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது. ஆனால், நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என்பதே எண்ணூர் கிராம மக்களின் கோரிக்கை. எண்ணூர் பெரியகுப்பத்திலுள்ள கோரமண்டல் ஆலை நுழைவு வாயிலில் தொடங்கிய போராட்டம், எண்ணூர் முழுவதும் பரவி, 43-வது நாளாகத் தொடர்கிறது.

பசுமை தீர்ப்பாயம்

இந்நிலையில், எண்ணூர் கோரமண்டல் அமோனிய வெடிப்பு தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் நடந்துவரும் வழக்கில் நேற்று முந்தினம் (05.02.24) நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில், `கடந்த 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியம் எடுத்து சென்றதே கசிவுக்கு காரணம்’ என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோரமண்டல் நிறுவனம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதே விபத்துக்கு காரணம் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கசிவை கண்டறிய நிறுவனத்தின் உள்ளே மட்டும் தானியங்கி கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் தானயங்கி கருவிகள் பொருத்தப்படவில்லை. அமோனியம் கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை தமிழகத்தில் இனி செயல்பட அனுமதிக்க முடியாது எனவும் மாசுகட்டுபாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

கோரமண்டல் நிறுவனம் தரப்பில், “கடந்த 1996ம் ஆண்டு முதல் இயங்கி வரும் நிறுவனத்தில் இது போல விபத்துகள் ஏற்பட்டது இல்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக 35 தானியங்கி கருவிகள் நிறுவனத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. 150 ஒலி எழுப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்” என கோரப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை விதிகளின் படி நிறுவனம் செயல்படவில்லையா? விபத்து ஏற்படும் போது தானியங்கி வசதி செயல்பாட்டில் இருந்ததா? நிறுவனத்துக்கு வெளியில் தானியங்கி செயலிழப்பு கருவி இல்லையா? என்பது குறித்து  கோரமண்டல் நிறுவனம் விளக்கமளிக்க  உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை மார்ச் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

பகத் வீரா அருண்

இந்த அறிக்கை தொடர்பாக, எண்ணூர் மக்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் பகத் வீரா அருணிடம் பேசினோம். “இந்த அறிக்கையில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன.  முதலில் அவற்றை பட்டியலிடுகிறேன்.

• குழாய் வெடிப்பின் போது 67.638 டன் அளவிலான அமோனியா வெளியேறிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

• மிக்ஜாம் புயலின் காரணமாகதான் கரையில் பாறைகள் உருண்டு குழாய் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். குழாய் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வின் போது ஆலைக்கு தெரிந்துள்ளது. தெரிந்தும் கப்பலில் இருந்து அமோனியா ஏற்றுவதற்காக pre-cooling வேலையை செய்துள்ளனர். pre-cooling செய்ய நைட்ரஜன் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அமோனியாவையே பயன்படுத்தி உள்ளதை அறிக்கை உறுதி செய்கிறது.

• ஆலையில் அமோனியா கசிவை கண்காணிக்க பொருத்தப்பட்டிருந்த 10 சென்சார்களிலும் கசிவு உணரப்படவில்லை. அதாவது வேலை செய்யவில்லை.

• ஆலைக்கு உள் பாதுகாக்க (on-site safety preparedness plan) தொடர்பான திட்டங்களை செய்துள்ளார்கள். ஆனால் ஆலைக்கு வெளியே பாதுகாப்பு தொடர்பான திட்டம் (off-site safety preparedness plan) பற்றி தெளிவாக அறிக்கையில் இல்லை.

இவ்வளவு நாள் எண்ணூரில் தொழிற்சாலைகள் நடத்திய அத்துமீறல்களை கண்டுக்கொள்ளமால் இருந்தனர். இந்த அமோனியா கசிவு பிரச்னையிலும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் அமைதி காத்தது. மக்களின் தொடர் போராட்டம் கொடுத்த அழுத்தமுமே ஓரளவுக்காவது தவறுகளை சூட்டிக்காட்டும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக நினைக்கிறோம்.
1992 -ம் அண்டு செனகல் நாட்டில் ஏற்பட்ட அமோனியா விபத்தில் 129 பேர் கொல்லப்பட்டனர்.

சுமார் 1,150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு வெளியானது வெறும் 22 டன் அமோனியா. எண்ணூரில் வெளியானது மொத்தம் 67 டன் அமோனியா! செனகல் விபத்தைவிட மூன்று மடங்கு அதிகம். வெளியான அமோனியாவில் பெரும்பகுதியை கடல் வாங்கிக்கொண்டதால் மக்கள் உயிர் தப்பினர். இல்லாவிட்டால் பெரும் உயிர் இழப்புகளை எண்ணூர் மக்கள் சந்தித்து இருப்போம்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

எங்களின் எளிமையான கேள்வி என்னவென்றால், திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தது போல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடந்து கொள்கிறது?. இதுவரை ஆலையில் நடந்த விதிமீறல்கள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியாதா? இந்த வழக்கு தீவிரமானதால் தற்போது ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தான் 2வது குற்றவாளியாக இருக்கும்.

மக்கள் களத்தில் இன்னும் உறுதியுடனும் தீவிரமாகவும் உள்ளனர். இன்று(06-02-2024) மட்டும் 12 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றதில் சுமார் 8000 மக்கள் கலந்துகொண்டனர். எண்ணூர் வியாபாரிகள் சங்கம் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மொத்தத்தில் உள்ளூர் மக்களின் உயிருக்கோ, சூழலுக்கோ எவ்வித மதிப்பையும் கோரமண்டல் நிறுவனம் தரவில்லை என்பது இந்த அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.

அடிப்படையாக செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளையே இதுவரை இந்நிறுவனம் செய்யவில்லை எனும் போது அந்நிறுவனத்தை இழுத்து மூடுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். கோரமண்டல் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்ற எண்ணூர் மக்களின் கோரிக்கை மிக மிக மிக நியாயமானது. அறிவியல் பூர்வமாகவும் சரியானது.” என்றார்.

இது தொடர்பாக கோரமண்டல் நிறுவன தரப்பின் விளக்கத்தை பெற முயற்சித்தோம். ஆனால் அவர்களி நமது அழைப்பை ஏற்க்கவில்லை. அவர்கள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *