'குடும்ப அரசியல் எது? – விளக்கிய மோடி' – கொதிக்கும் காங்கிரஸ்!

Modi Parliment.png

நடப்பு பா.ஜ.க அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் 31.1.2024 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. 1.2.2024 ஆண்டு மத்திய அரசின் 2024 – 2025ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதையடுத்து 5.2.2024 அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, ”பத்தாண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே குடியரசுத் தலைவரின் உரை பிரதிபலிக்கிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நாங்கள் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய நான்கு சக்திகளை பற்றி பேச இருக்கிறோம். ஆனால் தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. ஆட்சிக்கு வர அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம். அதில் எந்தவொரு தவறும் இல்லை. ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவது தான் குடும்ப அரசியல். ஒரே முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும், மீண்டும் முயல்வதால் தான் காங்கிரஸை இழுத்து மூடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் பிரச்னைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு சிலரின் முக்கியத்துவத்தைக் குறைக்கக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது. காங்கிரஸின் செயல்பாடுகளால் அக்கட்சிக்கும், பிற கட்சிகளுக்கும், நாட்டிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினர் என சமூகத்தை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்துகின்றனர். நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்.

ஜவர்ஹலால் நேரு

வந்தே பாரத், புதிய நாடாளுமன்ற கட்டடம், மேக் இன் இந்தியா உள்ளிட்டவை நாட்டின் சாதனைகள். அரசின் அத்தனை நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது. உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுகிறது என்பதை ஜி-20 மாநாட்டின் மூலம் புரிந்து கொண்டார்கள். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும். அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும். இதுதான் மோடியின் கியாரண்டி” என்றார்.

மேலும் பேசியவர், ” ‘பொதுவாக இந்தியர்களுக்குக் கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை, ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் போல இங்குள்ளவர்கள் உழைக்கவில்லை’ என நேரு பேசியிருந்தார். ‘இந்தியர்கள் சோம்பேறிகள், புத்திசாலித்தனம் குறைவாக உள்ளவர்களாக என நேரு நினைத்தார் என்பதே இதற்கு அர்த்தம். இதேபோல் ‘சில சுப காரியங்களின் போது, ​​​​நாம் மனநிறைவு அடைகிறோம். ஆனால், எந்த சிரமம் வந்தாலும், நம்பிக்கையற்றவர்களாக மாறுகிறோம். சில சமயங்களில் ஒட்டுமொத்த தேசமும் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. தோல்வி உணர்வை ஏற்றுக்கொண்டது போல் தெரிகிறது’ என இந்திரா பேசியதன் மூலம் அவர் நாட்டு மக்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார்” என பேசினார்.

நேரு தன் மகள் இந்திரா காந்தியுடன்…

இது நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தொடர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. இதுகுறித்து முன்னாள் பிரதமர் நேருவைப் பற்றிப் பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. “மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திரா காந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல வேடிக்கை பார்த்த மோடி தொடர்ந்து வரலாற்றுத் திரிபு வாதங்களைச் செய்து வருகிறார்.

1959-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதமராக நிகழ்த்திய உரையை பிரதமர் மோடி திரித்துப் பேசியிருக்கிறார். இந்த உரையில் பிரதமர் நேரு ‘ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணம் கடுமையான உழைப்பு தான். கடின உழைப்பு நமக்குப் புதிதல்ல, இதற்கு எதிரான சோம்பல் நமது இயல்பு அல்ல. அறிவாலும், கடின உழைப்பாலும் நாமும் முன்னேறலாம். உழைப்பில்லாமல் உயர்வில்லை” என்று பேசியதைத் திரித்துப் பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல. குண்டூசி கூட தயாரிக்க முடியாத அவலநிலையிலிருந்த இந்தியாவில் 1947-ல் பிரதமராக பதவியேற்றார்.

ராகுல் காந்தி

17 ஆண்டுக் காலத்தில் ஒருநாளைக்கு காலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல கடுமையாக உழைத்த பண்டித நேரு மீது இத்தகைய கடுமையான விமர்சனத்தை மேற்கொள்வது மோடியின் கல் நெஞ்சத்தையே காட்டுகிறது. தொழிற்சாலைகளை பொதுத்துறையில் துவங்கினார். ரூர்கேலா, பிலாய், துர்காபூர் ஆகிய இடங்களில் உருக்கு ஆலைகளை நிறுவினார். நேரு வளர்த்த பொதுத்துறையை இன்றைக்கு தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்து பிரதமர் மோடி அழித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் தொடங்கிய ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி, பிரதமர் நேருவைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியைக் காக்க 1951-ல் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்தவர். தீண்டாமை குற்றச் சட்டம், குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியவர். வெளியுறவுக் கொள்கையில் வல்லரசுகளுக்கு எதிராக அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கியவர்.

கே.எஸ்.அழகிரி

அன்னை இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார், மோடி. இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் பொறுப்பேற்று வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கதேச போர் வெற்றி, இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நிகழ்த்தியவர், முதல் விண்வெளி பயணத்தின் மூலம் முதல் இந்தியராக ராகேஷ் சர்மாவை அனுப்பி சாதனை படைத்தவர். இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் படைத்தவர்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்க மாட்டார்கள்.

1947 ஆகஸ்ட் 15, ஜனவரி 26, 1950 ஆகிய இரு நாட்களை தவிர, தொடர்ந்து 22 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத, அது ஒரு துண்டு துணி என்று கொச்சைப்படுத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் பாரம்பரிய தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைக் குவித்து ஊழலை வளர்க்கிறார்கள். இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” என கொதித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *