“நானே கேள்வி நானே பதில்; `புரிந்தால்’ புரிந்து கொள்ளுங்கள்” – புத்தகத் திருவிழாவில் நீதிபதி சந்துரு

Img20240205202301.jpg

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது புத்தகத் திருவிழா பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில், “நான் இங்கு சில கேள்விகளை முன்வைக்கிறேன். அதற்கு நானே பதிலும் சொல்கிறேன். ஏன் என்றால் நம்முடைய பழக்க வழக்கங்களில் கேள்வி கேட்பது என்பதையே நாம் விரும்பவில்லை. கேள்வி கேட்கவே பயப்படுகிறோம், நடுங்குகிறோம்.

முதல் கேள்வி…

`நாம் ஏன் படிக்க வேண்டும்?’… அப்பொழுதுதான் இடிக்க மாட்டார்கள்.

`எதைப் படிக்க வேண்டும்?’… எதைப் படித்தால் இடிக்க மாட்டார்களோ அதை படிக்க வேண்டும்.

`எதை இடிப்பார்கள்?’… எதை இடிக்க கூடாதோ அதைத் தான் இடிப்பார்கள்.

`பிரார்த்தனை கூடத்தை இடிப்பது பாவம் இல்லையா?’… பாவம் புண்ணியத்தை பார்த்தால் யார் பாரத ரத்னா கொடுப்பார்கள்.

நான் கூறிய பதில்கள் புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள். புரியவில்லை என்றால் யோசித்து புரிந்து கொள்ளுங்கள்.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

அந்தப் பள்ளிவாசலை இடித்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 153 ஏ பிரிவு சொல்கிறது, `ஒரு சிறிய மதத்தை துவேஷம் செய்தால் அவர்களை இரு சமூகத்தினருக்கிடையே பிளவு ஏற்படுத்த காரணமாக இருந்தார்கள் என்று குற்றம்சாட்டி தண்டிக்க முடியும்.’ என்று. ஆனால் ஒரு பள்ளிவாசலையே இடித்திருக்கிறார்கள். அதில் சம்பந்தப்பட்ட யாரும் தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றமோ, நேரில் பார்த்த சாட்சி இல்லை, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டது. நாம் அனைவரும் இந்த சம்பவம் நடந்த பொழுது இடித்தவர்களின் புகைப்படங்களை எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தோம். அவர்களை துணை ராணுவம் பாதுகாத்துக் கொண்டுத்தான் இருந்தது.

ஆனால் ஒருவர் தண்டிக்கப்பட்டார். அவர்தான் அப்போதைய உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர் கல்யாண் சிங். அதுவும் அந்த பள்ளிவாசலை இடித்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. இந்தப் பள்ளிவாசலுக்கு ஆபத்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தபோது, `அது முழுக்க முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் நான் பார்த்துக் கொள்வேன்’ என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் கூறிய அடுத்த பதினைந்து நாள்களுக்குள் அந்தப் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. அதற்காக முதல்வர் வாக்கு தவறிவிட்டார். நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்ற குற்றத்திற்காகவே அவரை தண்டிப்பதாக கூறி நீதிமன்றம் தண்டனை விதித்தது. அந்த தண்டனையை கேட்டால் சிரிப்பீர்கள். தண்டனை இல்லா தண்டனை என்பதுப்போல், இந்த நீதிமன்றம் கலையும் வரை ஒருநாள் முழுக்க நீதிமன்றத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்ற தண்டனை தான் அது.

நீதிமன்றம் தானே உங்களை தண்டித்தது. எங்களிடம் விருது இருக்கிறது இந்தா வைத்துக்கொள்ளுங்கள் என்று நாட்டின் உயரிய விருதான பத்மஶ்ரீ விருதை வழங்கி அழகு பார்த்தனர். ஆனால் அந்த சம்பவத்திற்காக யாருமே தண்டிக்கப்படவில்லை என்பதே உண்மை.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

அனைத்தையும் விட பேனா முனை சக்தி வாய்ந்தது என்று கூறுவார்கள். ஆனால் அதை விட சக்தி வாய்ந்தது தான் கடப்பாரை. அந்தக் கடப்பாரையைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் அப்படித்தான் பள்ளிவாசலையும் இடித்து கோயிலை கட்டினார்கள். “பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்வோம்” என்ற பாரதியின் இந்த கவிதையை தவறாக படித்து, பள்ளி என்று கூறியதை பள்ளிவாசல் என புரிந்து கொண்டார்கள் போல. உண்மையில் பாரதி கூறியது கோயில்கள் நிறைய இருக்கிறது. ஆகவே கோயில்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் பள்ளிகளை அமையுங்கள் என்று தான். படிப்பது ராமாயணம் இடிப்பது பிள்ளையார் கோவில் என்பது பழமொழி. படிப்பது ராமாயணம் இடிப்பது பள்ளிவாசல் என்பது புது மொழி

படிப்பது முக்கியமில்லை படிப்பதை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பள்ளிவாசல் வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் சொத்து யாருக்கு என்ற அடிப்படையில் தான் வழக்கு தொடங்கப்பட்டிருந்தது. அப்படியாயின், சொத்துரிமை சட்டத்தின்படி 12 ஆண்டுகள் நம்முடைய சொத்துக்களை, எதிர்ப்பையும் மீறி ஒருவர் அனுபவித்துக் கொண்டிருந்தால் அந்த சொத்து அவருக்கு சொந்தமாகும் என்ற அட்வைஸ் பொசிஷன் என்ற சட்டம் உள்ளது. அந்த இடத்தில் 500 ஆண்டுகளாக பள்ளிவாசல் இருந்திருக்கிறது. அந்த சொத்து விதியை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அங்கு உரிமை கோரியவர்களிடம் அந்த சொத்தின் மூல பத்திரம் போன்ற ஆவணங்களை கேட்டிருக்க வேண்டும். எந்த ஒரு சொத்துரிமை சட்டத்தையும் பின்பற்றாமல், எந்த ஒரு ஆவணங்களையும் கேட்காமல், பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு என்ற புதிய விதியை உருவாக்கி, யார் அந்த தீர்ப்பை எழுதியது என்று தெரியாத அளவிற்கு 5 பேர் ஏகமனதாக அந்த தீர்ப்பை வழங்குதாக குறிப்பிட்டார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “காசியிலே இரண்டாண்டுகளுக்கு முன்பு துறவிகள் மாநாடு ஒன்று நடைப்பெற்றது. அந்த மாநாட்டில் அவர்கள் ஆன்மிக கருத்தை பற்றி பேசவில்லை. சமய கருத்தை பற்றி பேசவில்லை. இந்தியாவுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பேசுகின்றனர். அப்படி ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் “இந்தியா ஒரு இந்து ராஷ்டிர நாடு” . இந்தியாவின் அரசு மதம் இந்து மதம். அப்பொழுது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்கே போவார்கள் என்று கேட்டார்கள். அவர்கள் இங்கேயே இருக்கலாம். தொழில் செய்யலாம். கல்வி கற்கலாம். ஆனால் ஓட்டு மட்டும் போடக்கூடாது என்பதாகத்தான் இருக்கும். புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்குவது குறித்த வரைவை தயார் செய்து அதைப்பற்றி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

வரலாற்றை படிக்க வேண்டும் என்றால் வரலாற்றையே திருத்துவார்கள். புவியியலை படிக்க வேண்டும் என்றால் நிலத்தையே மாற்றுவார்கள். ஆனால் நாம் அதையெல்லாம் மீறி சட்டத்தை படிக்க வேண்டும். நீதியை படிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும். தற்போது உள்ள அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியமான ஒரு பகுதி ஒருவருக்கும் மதத்தை நம்புவது , மதத்தை பிரச்சாரம் செய்வது போன்ற மதம் சார்ந்த உரிமை உண்டு. இதைத்தான் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் பக்கத்தில் இன்னும் மிக தெளிவாக இந்தியா ஒரு சோசலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை பெற்ற, ஜனநாயக குடியரசு நாடாக இருக்கிறோம் என்று சொல்லியிருக்கின்றனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

இப்போது பிரச்சினை என்னவென்றால் 75 ஆண்டுகள் நாம் பழகிப்போன இந்த அரசியலமைப்பு சட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதாக மாறிவிட்டது. 2019 ஆம் ஆண்டு ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதில் புதிய விதியை பயன்படுத்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அப்பொழுது அதற்கு எதிராக குரல் கொடுத்தார்கள். நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்படி ஒரு விதி இருக்கிறதா என்று இணையத்தில் தேடி பார்க்கின்றனர். அப்படி விளையாட்டுக்காக கேள்வி கேட்டுக்கும் நாம்‌‌, அரசியலமைப்பையே மாற்றுவது குறித்து பேச்சுகள் எழும் போது ஏன் குரல் எழுப்பாமல் இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் நம் அண்டை நாடுகளைப் போல நிலையில்லாத ஒரு அரசியலமைப்பைத்தான் காண நேரும்.

முதலில் ஹலால் பிரச்னை, தற்போது ஹிஜாப் பிரச்னை. ஹிஜாப் பிரச்னையால் 20,000 இஸ்ரேலிய பெண்கள் பத்தாம் வகுப்பு தேர்வு கூட எழுத முடியாத சூழல் இருக்கிறது. இப்படி தலையாய பிரச்னைகள் இருக்கும் போது அதையெல்லாம் காலிலே போட்டு மிதித்து விட்டு , புதிய பிரச்னையாக ஒரு நாடு ஒரு தேர்தல் என்று துவங்கப்பட்டுள்ளது. இது மாறி மாறி ஒரே கட்சி, ஒரே தலைவன் என்று வந்து நிற்கும்” என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *