அண்ணன் மகனிடம் கட்சியை இழந்த சரத் பவார்; அஜித் பவார் அணிக்குச் சொந்தமானது தேசியவாத காங்கிரஸ்!

Untitled 6.jpg

மகாராஷ்டிராவில் 2022-ம் ஆண்டு சிவசேனாவும், 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது. ஏற்கெனவே எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் அணியில் 43 எம்.எல்.ஏ-க்கள் இடம் பெற்றிருக்கின்றனர். அதனடிப்படையில் தங்களது அணியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி, தேர்தல் கமிஷனில் அஜித் பவார் மனு கொடுத்திருந்தார். சரத் பவாரும் தங்களிடம் கேட்காமல் எந்த வித முடிவையும் எடுக்கக் கூடாது என்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருந்தார்.

சரத் பவார்

அதோடு சுப்ரீம் கோர்ட்டிலும் சரத் பவார் சார்பாக மனு கொடுக்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிரா சபாநாயகரிடம் அஜித் பவாருக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று கோரி, சரத் பவார் மனு கொடுத்திருந்தார். இந்த மனுமீது இந்த மாத மத்தியில் சபாநாயகர் முடிவு எடுக்கவிருந்தார். மற்றொரு புறம் தேர்தல் கமிஷனும் இது தொடர்பாக விசாரித்து வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்புகூட சரத் பவாரும், அவரின் மகள் சுப்ரியா சுலேயும் தேர்தல் கமிஷனில் ஆஜராகி, தங்களது தரப்பு விளக்கத்தை எடுத்துக்கூறினர்.

தேர்தல் கமிஷன் இரு தரப்பினரிடமும் கடந்த 6 மாதங்களில் 10 முறை விசாரணை நடத்தியது. இந்த மாதம் 27-ம் தேதி மகாராஷ்டிராவில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இன்று தேசியவாத காங்கிரஸ் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவித்திருக்கிறது. அதன்படி அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகிய இரண்டும் அஜித் பவார் அணிக்குச் செல்கிறது. மேலும் சரத் பவார் அணி தங்களது அணிக்கு என்ன பெயர் வேண்டும் என்பது குறித்தும், என்ன சின்னம் வேண்டும் என்பது குறித்தும் வரும் 7-ம் தேதி மாலை 3 மணிக்குள் தெரிவிக்கும்படி தேர்தல் கமிஷன் கெடு விதித்திருக்கிறது.

அஜித் பவார்

அஜித் பவார் அணிக்கு அதிகப்படியான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தப்படாது குறித்தும், கட்சியை தனியார் நிறுவனம் போன்று நடத்தியதாகவும் தேர்தல் கமிஷன் குற்றம்சாட்டியிருக்கிறது. தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பு அஜித் பவார் அணிக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுவதும் அஜித் பவார் ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் கமிஷனின் அறிவிப்பு `ஜனநாயக படுகொலை’ என்றும், `துரதிஷ்டவசமானது’ என்றும் சரத் பவார் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கமிஷன்

தேர்தல் கமிஷனின் முடிவு சரத் பவார் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. உத்தவ் தாக்கரேயைத் தொடர்ந்து சரத் பவாரும் தனது கட்சியை இழந்துள்ளார். உத்தவ் தாக்கரே 2021-ம் ஆண்டு முதல்வராக, மகாராஷ்டிராவில் சரத் பவார் புதிய அணியை உருவாக்கினார். அந்த அணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்து உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் தங்களது கட்சியை இழந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *