அரவிந்த் கெஜ்ரிவாலை வளைக்க முயல்கிறதா பாஜக?! – பின்னணி என்ன?

1707127866 Mrkt5unk Arvind Kejriwal Pti 625x300 01 November 18.webp.png

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, எதிரணியினரை பலவீனப்படுத்துவதற்கான எல்லா வேலைகளையும் பா.ஜ.க மேற்கொண்டுவருகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பிவருகின்றன. அவர்களின் குற்றச்சாட்டை நிரூபிப்பதைப்போலவே, எதிர்க்கட்சிகளுக்கு எதிரான வேலைகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது.

ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை நில முறைகேடு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் பரபரக்கின்றன.

ஹேமந்த் சோரனை நில முறைகேடு வழக்கிலும், அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி மதுபான முறைகேடு வழக்கிலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பிவந்தது. ஆனால், இருவருமே அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துவந்தனர்.

சம்பாய் சோரன் – ஹேமந்த் சோரன்

சமீபத்தில், ஹேமந்த் சோரன் மீது தனது பிடியை அமலாக்கத்துறை இறுக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு அவர் சம்மதித்தார். ஹேமந்த் சோரனை அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 20-ம் தேதி விசாரித்தனர். மீண்டும் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்த அமலாக்கத்துறை, ஜனவரி 27-ம் தேதியே ஹேமந்த் சோரன் டெல்லியில் துரத்த ஆரம்பித்தது.

அமலாக்கத்துறை டெல்லியில் தேடுதல் வேட்டையில் இருந்த நேரத்தில், சாலை வழியாக ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி சென்றுவிட்டார் ஹேமந்த் சோரன். ஆனாலும், கடைசியில் அவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது அமலாக்கத்துறை. முதல்வர் பதவியையே அவர் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜே.எம்.எம் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை குதிரைபேரத்தின் மூலமாக வளைத்து, ஆட்சியை அபகரிக்க பா.ஜ.க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜே.எம்.எம் கட்சிக்கு எதிரான சவால்களை முறியடித்து, அமைச்சர் சம்பாய் சோரனை புதிய முதல்வராகியிருக்கிறது அந்தக் கட்சி.

கெஜ்ரிவால்

ஹேமந்த் சோரனுக்கு அடுத்தபடியாக, அமலாக்கத்துறையின் கவனம் அரவிந்த் கெஜ்ரிவால் பக்கம் திரும்பியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தொடர்ச்சியாக சம்மன்களை அனுப்புவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ.க அரசு முயல்வதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்திவரும் நிலையில், ‘நேர்மைதான் என்னுடைய மிகப்பெரிய சொத்து’ என்று அவர் கூறியிருக்கிறார். மேலும், ‘ஊழல்வாதிகளை பா.ஜ.க அரசு கைதுசெய்யவில்லை. மாறாக, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றை பயன்படுத்தி, எதிரணியில் இருக்கும் தலைவர்களைப் பிரித்து, அவர்களை பா.ஜ.க-வில் இணையவைப்பதற்கான அழுத்தம் தரப்படுகிறது. இத்தகைய செயல்கள், ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். என் பலம் முழுவதையும் பயன்படுத்தி அவர்களுக்கு எதிராகப் போராடிவருகிறேன்’ என்றும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

மணீஷ் சிசோடியா

டெல்லி மதுபான ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில், ‘நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கெஜ்ரிவாலுக்கு தொடர்ச்சியாக சம்மன் அனுப்புவதன் நோக்கம் என்ன… ஏன் அவரை முன்பே விசாரணைக்கு அழைக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.

‘எட்டு மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ அழைத்தபோது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தேன். தற்போது, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், ஏன் என்னை அழைக்கிறார்கள்? பா.ஜ.க-வின் நோக்கம் விசாரணை நடத்துவது இல்லை. விசாரணை என்ற பெயரில் அழைத்து, என்னை கைது செய்ய வேண்டும். என்னை கைது செய்துவிட்டால், என்னால் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடியாது. அதுதான் பா.ஜ.க-வின் நோக்கம்’ என்கிறார் கெஜ்ரிவால்.

அமித் ஷா, மோடி

மேலும் சில கேள்விகளை கெஜ்ரிவால் எழுப்புகிறார். ‘மத்திய அரசின் அமலாக்கத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சோதனைகளை நடத்தியதுடன், பலரைக் கைது செய்திருக்கிறது. ஆனால், ஒரு நையா பைசாவைக்கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கெனவே ஊழல் நடந்திருந்தால், அந்தப் பணமெல்லாம் எங்கே போனது… எல்லா பணமும் காற்றில் மாயமாகிவிட்டதா? உண்மை என்னவென்றால், ஊழல் எதுவும் நடக்கவில்லை. ஊழல் நடந்திருந்தால், பணத்தை அவர்கள் கைப்பற்றியிருப்பார்கள்’ என்கிறார் கெஜ்ரிவால்.

‘எங்களிடம் வந்துவிடுங்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் அவர்களுடன் சேரமாட்டேன்’ என்று பா.ஜ.க-வுக்கு எதிராக அதிர்ச்சித் தகவல் ஒன்றையும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு பா.ஜ.க மறுப்புத் தெரிவித்திருக்கிறது. ‘இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியிட முடியுமா?’ என்று பா.ஜ.க-வினர் கேட்கிறார்கள்.

கெஜ்ரிவால்

திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. ஆனால், ‘இந்தியா’ கூட்டணி பா.ஜ.க-வுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் நிலையில், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ.க கூட்டணிக்கு தாவியது வெட்டவெளிச்சம். அதேபோல, ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முதல்வர் ஹேமந்த் சோரனை துரத்தித்துரத்தி அமலாக்கத்துறை கைது செய்ததை நாடே பார்த்தது. ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் மற்றொரு தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான நெருக்கடியும் அதிகரித்துவருவதும் கண்கூடாகத் தெரிகிறது. இதன் மூலம் இந்தியா கூட்டணியை பலவீனமாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துவிட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *